ankajan
அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ். மக்களின் குரலாக எப்போதும் இருப்பேன்! – கூறுகிறார் அங்கஜன்

Share

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இன்றைய தினம் அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டது.

அந்த செய்தி குறிப்பில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஆணையாக வழங்கிய என் மாவட்ட உறவுகளும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் மக்களை நேரில் சந்தித்து அவர்களது நிலைப்பாடுகளை நேரில் கேட்டறிந்து கொண்டேன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில், மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நான் மதிக்கின்றேன். எங்கள் உறவுகள் இன்று பசியோடு இருக்கிறார்கள், நீண்ட வரிசையில் நின்று பொறுமையிழந்து இன்று வீதிகளில் போராட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை முற்றாக முடக்கிய கொரோனா பாதிப்பின் உடனடி எதிர்வினைகளை இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினூடாக நாம் எதிர்கொண்டுள்ளோம். நாட்டில் ‘இல்லை’ என்கிற வார்த்தைகளே இப்போது எங்கும் கேட்கிறது. இது இந்த தேசத்துக்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும். இதிலிருந்து நாம் மீண்டேயாக வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வந்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குரிய அழுத்தங்களை நாட்டின் சிரேஷ்ட கட்சியாக நாம் பிரயோகித்தே வந்தோம். நாட்டின் எதிர்கட்சி செயல்திறனற்று இருந்த நிலையில் அரசாங்கத்தை வழிப்படுத்த கட்சியாக நாம் பாடுபட்டோம். ஆனால் இப்போது அனைத்தும் எல்லைமீறி விட்டது.

நாட்டின் நிகழ்கால பிரச்சனைக்குரிய தீர்வை மக்கள் கோரி நிற்கிறார்கள். அதனூடாக தமது எதிர்காலத்தை வளர்த்தெடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நோக்கம் அதுவாகவே உள்ளது.

எனவே, பிரதான எதிர்க்கட்சி செயற்படுவது போன்று நாட்டை மீட்டெடுப்பதற்கான தீர்வுகளின்றி, வெறுமனே எதிர்ப்பரசியலை மாத்திரம் மேற்கொள்வதை நாம் விரும்பவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நாம் விரும்புகிறோம்.

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக தீர்மானித்தோம். கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த அறிவிப்பை பாராளுமன்றத்தில் இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

எனது யாழ் மாவட்ட உறவுகள், யுத்தத்துக்கு பின்னதான அபிவிருத்திகளையும், வாழ்வாதார மேம்பாட்டையும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த பொருளாதார நெருக்கடி நிலை அவர்களை மேலும் பாதித்துள்ளது.

கடந்த 20 மாதங்களாக மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக செயற்பட்டு எம்மக்களுக்கான அபிவிருத்திகளையும், வாழ்வாதார மேம்பாடுகளையும், அரசாங்கத்தின் திட்டங்களை அதிகப்படியாக எமது மண்ணிற்கு பெற்றுக்கொடுத்துள்ளேன். தேசிய பாடசாலைகள், சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்தி கிராமங்கள், இளைஞர் மேம்பாட்டு திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள், குடிநீர் வசதிகள், விவசாயத்திட்டங்கள் என பல்வேறு பணிகளை மக்களின் ஆதரவோடு நாம் முன்னெடுத்துள்ளோம்.

எங்கள் மக்களுக்கென்று தனியாக கனவுகள் உண்டு. நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட எம் மக்களின் தேவைகள் தனியானவை. யுத்தத்தால் இழந்தவற்றை மீட்கும் இலக்கோடு அவர்கள் பயணிக்கிறார்கள். கல்வி, தொழில், வர்த்தகம், விளையாட்டு, பிராந்திய தன்னிறைவு பொருளாதாரம் என அவர்களுக்கான தனித்துவமாக கனவுகள் உள்ளன.

அந்த மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை “என் கனவு யாழ்” எனக்கொண்டு மக்கள் பணி ஆற்றுவதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியிருந்தனர். அதனை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு நாம் செயற்பட்டோம். தொடர்ந்தும் செயற்படுவோம்.

“என் கனவு யாழ்” ஒரு நீண்ட பயணம். மக்களின் தேவைகள் ஒவ்வொன்றும் இதற்குள் அடங்கும். அவற்றை நிறைவேற்றுவதே மக்கள்பிரதிநிதியான எனது பொறுப்பு. அந்த பொறுப்புக்கூறலின் அடிப்படையிலும், மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் என் மாவட்ட உறவுகளோடு எப்போதும் நிற்பேன், அவர்களின் குரலாக செயற்படுவேன் என உறுதிமொழிகிறேன்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டுவருவதற்கான திட்டங்களையும் முன்மொழிவுகளையும், ஆதரவுகளையும் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்வல்லுநர்கள், புலம்பெயர் சமூகம் என அனைத்து தரப்பினரும் முன்வைத்து நாட்டை மீண்டெடுக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...