எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு IMF நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை என்றும் கடன்சுமையை அதிகரிப்பதால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்ததும் மேலே வருவோம் என்று அரசாங்கம் கூறுவது நகைச்சுவையானது. கடந்த காலங்களில் ஊழல் மோசடியின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்காமையே நாடு இந்த நிலைக்கு தள்ளப்படக் காரணமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றுக்கொள்வது பெருமையடையும் விடயமல்ல. வெட்கப்பட வேண்டிய விடயமே.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவே தீர்மானித்தார். அப்போது அதன் நிபந்தனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஆனால் நிதி அமைச்சராக ரணில் வந்த பின்னரும் இன்னும் சரியாக அந்த நிபந்தனைகள் முன்வைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் எரிபொருள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, எரிவாயுவிலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பன இந்த நிபந்தனைகளுக்கமையே நடந்தன.
வட்டியுடன் வழங்கும் கடனே இது. இதனை பெறுவதா? இல்லையா? என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு இணங்கியே விலைகள், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை. இப்போது நடப்பது கசாயம் என்று நஞ்சைக் குடிப்பதை போன்றது. வங்குரோத்தடைந்த நாட்டுக்கு கடன்சுமையை அதிகரிப்பதால் அதில் இருந்து தப்பிக்க முடியாது.
இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அதனை செய்துகாட்டுங்கள்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தை காட்டி மக்களை மயக்கமடைய செய்து, மக்கள் உறங்கும் போது அவர்களின் உடைகளையும் கழற்றி எடுக்கும் வேலையையே செய்யப் போகின்றனர். எழுந்து பார்க்கும் போது மக்களிடம் உடைகளும் இருக்காது. இன்னும் இரண்டு வருடங்களில் அது நடக்கப் போகின்றது என்றார்.
#SriLankaNews
Leave a comment