வடமராட்சி, நெல்லியடி கிழக்கு, ராணி மில் வீதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபை வாசலில் இன்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பக்கத்துக் காணியில் அமைக்கப்படும் மூன்று மாடிக் கட்டடத்தால் தங்களது வீட்டுக்குப் பாதிப்பு என்று தெரிவித்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச சபையிடம் இது தொடர்பாக பலதடவைகள் முறைப்பாடு செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தாம் போராட்டம் மேற்கொள்கின்றோம் என்று அந்தத் தம்பதி தெரிவித்தனர்.
போராட்டம் நடத்தியோருக்கும், சபைச் செயலாளருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் போராட்டம் பிற்பகல் 12.30 மணியளவில் நிறைவுக்கு வந்தது. சபை சட்டத்தரணி ஊடாக சட்டவிரோத கட்டங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சபைச் செயலாளர் தெரிவித்தார்.
அது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளரிடம் கேட்டபோது, கடந்த 3 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் சபைக்கு வர முடியவில்லை. இன்று காலை சபைக்கு வந்தபோது வாயிலில் தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். ஏன் இருக்கிறீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது, எம்மை கதைக்கவிடாமல் தொலைக்காட்சி செய்தியாளர் என கூறிக்கொண்டு ஒருவர் புகுந்து படம்பிடித்தார்.
அந்த தம்பதியிடம் கேட்டபோது, தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சட்டவிரோத கட்டுமானம் பற்றி தெரிவித்தனர். அந்த வீடு கட்ட தொடங்கியபோது பிரதேசசபையின் அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்போது, அதை மீறி கட்டுமானம் நடந்து வருகிறது. அதை நிறுத்த வேண்டும் என்று 3 முறை கடிதம் அனுப்பிவிட்டோம். அவர்கள் நிறுத்தவில்லை – என்றனர், இந்நிலையில் குறித்த கட்டடம் தொடர்பில் வழக்கத் தொடரவுள்ளோம்.
அதேவேளை, இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் சட்டவிரோத கட்டுமானத்தையே அமைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்வோம். இரண்டு சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், இரண்டு வீடுகளையும் இடிப்போம்- என்று தெரிவித்தார்.
Leave a comment