தான் பதவியேற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எந்தக் கடனையும் பெறவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சியம்பலாண்டுவவில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் பாரிய பிரச்சினையாக காணப்படுவதைக் கருத்திற் கொண்டு நல்ல நோக்கத்துடன் சேதன உரங்களை பயன்படுத்துவதற்கு விவசாய சமூகத்தினரிடையே முன்மொழிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சேதன உரம் என்பது உரம் மாத்திரம் அன்றி ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் அபிவிருத்தியடைந்த தொழில்நுட்பமாகும்.
பயிர்ச்செய்கைக்காக பெருமளவிலான விவசாயிகள் சேதன உரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும் விவசாய சமூகத்துக்குத் தேவையான அறிவை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ,
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரினதும் ஆதரவு முக்கியமானது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்தால், அவர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் தம்மையே விமர்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய நிர்வாகம் ஐந்தாண்டு பதவிக் காலத்துக்கான அனைத்து இலக்குகளையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அடையும் என ஜனாதிபதி பொது மக்களுக்கு உறுதியளித்தார்.
#SrilankaNews