சிறைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்களுக்கு எந்தவிதத்திலும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை.
மாறாக அவர்களின் உறவினர்களை சந்திக்க யாழ்ப்பாணம் சிறைக்கு தம்மை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்தனர்.
இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கைதிகளின் நலன், பாதுகாப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். சிறைக்கைதிகளை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக் கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளிக்கும்போதே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளுக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரிய தீர்வு வழங்குவதே எமது அமைச்சின் வேலைத்திட்டமாகும்.
குற்றம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் சிறைச்சாலை சென்று குறித்த கைதிகளுடன் உரையாடினேன்.
அதன்போது தாம் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். மாறாக உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை. நான் தமிழ் மொழியில் அவர்களுடன் கலந்துரையாடினேன்.
எவ்வாறு இருப்பினும் அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த நாம் தயாராக உள்ளோம். ஆகவே அவர்களுக்கு எது நடந்தாலும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment