“சிங்கள,பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது. அது நிலையானது. இதுவே யதார்த்தபூர்வமான உண்மைகூட. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அவரை பதவி விலக வைப்பதற்கு சிங்கள, பௌத்த சக்தி முன்னின்று செயற்பட்டது.”
இவ்வாறு கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
தொழிற்சங்க பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இணைந்து கொழும்பில் இன்று (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே தேரர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவர் தலைமையிலான அரசை விரட்டியடிப்பதற்கும் மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளுக்கு இவரே தலைமைத்துவம் வழங்கியிருந்தார். அரசுக்கு எதிராக சங்க பிரகடனத்தை வெளியிடுவதிலும் முன்னின்று செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே மேற்படி போராட்டத்தில் சிங்கள, பௌத்த சக்தியின் வகிபாகம் பற்றியும் தேரர் இன்று விவரித்தார்.
“சிங்கள, பௌத்த தலைமைத்துவம், சிங்கள, பௌத்த அதிகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எமக்கு எதிராக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நாட்டில் சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாது செய்ய முடியாது. அது நிலையானது. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிலர் முன்னெடுக்கும் செயற்பாடுகளையே நாம் விமர்சித்து வருகின்றோம்.
சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அவர் வசம் இருந்த சிங்கள, பௌத்த அதிகாரம் – சக்தி தற்போது இல்லாமல் போயுள்ளது. அதனால்தான் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஏனைய இன மற்றும் மத மக்களின் பூரண ஒத்துடைப்புடனேயே சிங்கள, பௌத்த சக்தியால் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏனைய இன, மத மக்களின் பூரண பங்களிப்புடன் சிங்கள, பௌத்த சக்திதான் செயற்படுகின்றது என்பதை இன்றும் தெளிவாக கூறிவைக்கின்றோம். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்த சக்தி இத்துடன் முடிந்துவிட்டது.
எனவே, இனியும் ஏமாறக்கூடாது. ஏனைய இன மற்றும் மதங்களின் ஒத்துழைப்புடன் எதிர்கால தலைவரை தேர்ந்தெடுக்க நாம் முன்வர வேண்டும்.” – என்றும் தேரர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment