அரசுக்கு எதிராக இன்று பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் உட்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று கடமைக்குச் செல்லாது தமது விடுமுறையை முறையாக அறிவித்து, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று சுகவீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன என்று வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயற்பட்டுவரும் அரசைப் பதவி விலகக் கோரி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு அனைவரும் வழங்குகின்றன என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்துக்குத் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்காக இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையூடாக நேற்றுக் கேட்டுக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment