அச்சுறுத்தலுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ: பதில் பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்தும் விடயம்
அச்சுறுத்தலுக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ என்ற சந்தேகநபரை சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவிருந்த சந்தர்ப்பத்தில் அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனால் அன்றைய தினம் மெய்நிகர் ஊடாகவே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. இந்த நிலையில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட 183 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதேச அரசியல்வாதிகளால் தத்தமது பகுதிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் என பதில் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.