இழுவைமடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!!

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தோம். இது எதற்குமே பயனில்லை.

மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.

அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கிறோம்.

அத்துமீறும் மீனவர்களை , அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்கு கொண்டு வரவும் எம்மால் முடியும்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை , எமது பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது என தெரிவித்தனர்-

dcca266e 66f6 4200 82b9 6b5959727e7f

#SrilankaNews

 

Exit mobile version