” உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் ஏற்பட்ட நிலைபோல் வங்குரோத்து அடைந்தது கிடையாது. வெளிநாடு செல்வதற்குகூட வெட்கமாகவுள்ளது. 3 மாதங்கள் நான் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். ஆனால் வெளியில் தலைக்காட்டவே இல்லை.”
இவ்வாறு இலங்கையின் 4 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தலைமையில் உதயமான ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ ( புதிய இலங்கை சுதந்திரக்கட்சி) கட்சியின் தலைமையக திறப்பு விழா நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சந்திரிக்கா அம்மையார் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்நாட்டை ஆண்டவர்கள் மக்கள் நலன் பற்றி சிந்திக்கவில்லை, மக்கள் தமக்கு வாக்களித்தால்போதும், அதன் பின்னர் நாட்டை சொந்தமாக்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே செயற்பட்டுள்ளனர். தவறான அணுகுமுறைகளைக் கையாண்டனர். இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல்ஆக்கப்பட்டனர்.
கள்வர்களை இந்தக் கட்சிக்கு இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், உரிய கொள்கைகளின் அடிப்படையில் பயணிக்குமாறும் குமார வெல்கமவிடம் கேட்டுக்கொள்கின்றேன். கொள்ளையடிக்கும் நோக்கில் எவரும் கட்சியில் இணைந்துவிடவும் வேண்டாம்.
அதேவேளை, உலகில் எந்தவொரு நாடும் இப்படி வங்குரோத்து அடைந்தது கிடையாது. வெட்கம். ஒரு அரச தலைவராக, முன்னாள் ஜனாதிபதியாக நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். தற்போது செல்வதற்கு வெட்கமாக உள்ளது. இங்கிலாந்தில் மூன்று மாதங்கள் இருந்தேன், எவரையும் சந்திக்கவில்லை. ” – என்றார்.
#SriLankaNews
Leave a comment