கம்மன்பில விமல் பஸில்
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

தாம் வளர்த்த பேரினவாதக் கடா தம் மார்பில் பாயும் அவலம் ராஜபக்சக்களுக்கு நேரும்!

Share

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ என்பார்கள். அரசியலுக்கும் இது பொருந்தும் போல்.

பேரினவாத அரசியல் ஓடத்தில் பயணித்தவர்கள் அதை இப்போது நல்லிணக்க வண்டியில் ஏற்றப் பார்க்கின்றார்கள். இனி என்ன? இதுவரை, நல்லிணக்க வண்டியில் பயணித்த அரசியல்வாதிகள் பேரினவாத அரசியல் ஓடத்துக்குப் பாய வேண்டியதுதான்.

விடுதலைப்புலிகளையும், அவர்களை அழித்த சாதனையையும் வைத்துத்தான் இதுவரை ராஜபக்சக்கள் அரசியல் செய்தார்கள். தெற்கில் தேர்தல் அரசியலில் பெருவெற்றி வாகைகளைச் சூடினார்கள். 2014 ஆம் ஆண்டு இறுதியுடன் அவர்களின் முதலாம் கட்ட இருண்ட ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட பின்னர் 2019 இல் அவர்கள் மீளெழுச்சி பெற்றமை கூட இதே பெளத்த, சிங்களப் பேரினவாத வெறியைப் பெருக்கெடுக்க வைத்துத்தான் என்பது வெளிப்படையானது.

இப்போது அவர்களே இந்த இனவாத அரசியலை வெறுத்து, ஒதுக்கி, நியாயம் பேசும் அரசியல் அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதுதான் அரசியல் விநோதம். விபரீதமும் கூட.

“அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் விவகாரத்தை முன்வைத்து இன்னமும் எவ்வளவு காலத்துக்கு அரசியலை முன்னெடுக்கப் போகின்றீர்கள்?” – என்று முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்றோரிடம் ராஜபக்ச தரப்பில் இருந்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

“புலிகள் ஆயுதத்தால் பெற முடியாததை கூட்டமைப்பு டொலரை முன்னிறுத்திப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டது” – என்று மேற்படி தரப்பினர் கண்டியில் மகாநாயக்கர்களைச் சந்தித்த பின்பு, அவர்கள் தரப்பில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

அரசு – கூட்டமைப்புப் பேச்சை ஒட்டியும் இத்தகைய இனவாதக் கருத்துக்களே அத்தரப்பால் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச,

“விமல் வீவரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் இனவாதத்தை வைத்துத்தான் அரசியல் நடத்தி வருகின்றார்கள். அரசுக்குள்ளிருந்தபோதும் இனவாதக் கருத்துக்களைத்தான் வெளியிட்டார்கள். அதனால் அரசு பெரும் அவப்பெயரைச் சந்தித்தது. தற்போது அரசுக்கு வெளியில் சென்றும் இனவாதக் கருத்துக்களைத்தான் முன்வைத்து வருகின்றனர். இவர்களின் இந்தக் கருத்துக்களால் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகளில் எந்தத் தடங்கலும் ஏற்படாது. அதேபோல் தமிழர் – சிங்களவர் உறவிலும் பாதிப்பு ஏற்படாது.

“அழிக்கப்பட்ட புலிகளை முன்வைத்து கம்மன்பில எத்தனை நாளைக்குத்தான் அரசியலை முன்னெடுக்கப் போகின்றார்? ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசு தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும்” – என்று பஸில் ராஜபக்ச கூறியிருக்கின்றார்.

தாம் வளர்த்த பேரினவாதக் கடா தம் மார்பில் பாயும் அவலம் ராஜபக்சக்களுக்கு நேரும். அதைச் சமாளிப்பதில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலமே தங்கியிருக்கும் என்ற நிலைமை உருவாகும் சாத்தியம் உண்டு.

– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (28.03.2022 – காலைப் பதிப்பு)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...

image 870x 6965aedee783e
செய்திகள்இலங்கை

பல மாகாணங்களில் மழை: சில இடங்களில் 50 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...

MediaFile 5 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern)...