உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பனவற்றிலும், கொழும்பிலுள்ள சில நட்சத்திரக் ஹோட்டல்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தக் கொடூரமான தாக்குதலின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர், அருட்தந்தைகள், மகா சங்கத்தினர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த ஆராதனைகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, பேராயரின் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெறவுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
#SriLankaNews
Leave a comment