ஈஸ்டர் தாக்குதல்! – விரைவில் நீதி வழங்கப்படும் என்கிறார் பிரசன்ன

Prasanna Ranatunga 44

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 735 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். 19 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக விசாரணைகள் நிறைவுபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளின் சொத்துகளும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நிலாந்த ஜயவர்தன எப்படி அரச சாட்சியாளராக மாறினார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் சட்டமா திபர் தபுல என்பவரே அவரை அரச சாட்சியாளராக மாற்றினார். அந்த சட்டமா அதிபர் ஓய்வுபெறும் தருவாயில்தான், இந்த தாக்குதல் சூழ்ச்சி என்ற கருத்தை பரப்பினார். அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்திருக்கலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள, பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version