இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை, யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசம் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் அங்கிருந்து ஊர்காவற்துறை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்றனர்.

பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி , மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் செல்வதனால் , எமது கடல் வளங்களும் , கடல் சூழலும் ,எமது உபகரணங்கள் , வாழ்வாதாரங்கள் என்பன அழிக்கப்படுகின்றன.

அதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். பல தரப்புக்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளோம். இருந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை .

வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்கப்படுத்தல் தடைச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அழிக்கப்பட்ட எமது தொழில் உபகரணங்களின் மதிப்புகள் பல கோடி ரூபாய். அதற்கான நஷ்டடஈடுகளை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை மலர்ந்துள்ள இந்த வருடத்திற்குள் எமக்கு தீர்வினை பெற்று தர சகல தரப்பினர்களும் முயற்சிகளை முன்னெடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் , கடல் வளத்தையும் காத்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

9a9127a1 6656 47fb b9e4 b7e7469ef58c

#SriLankaNews

Exit mobile version