பரு.வைத்தியசாலையில் குவியும் கொரோனா சடலங்கள் – இக்கட்டில் நிர்வாகம்!!!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேங்கியுள்ளன.
இதனால் குளிரூட்டியில் உடல்களைப் பேண முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பருத்தித்துறை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே பதில் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த 21 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட 20 பேர் உயிரிந்துள்ளனர் என்று தெரிவித்த பதில் பணிப்பாளர், உடல்களை மின் தகனம் செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வைத்தியசாலை பிரேத அறையில் சடலங்கள் தேங்கியுள்ளன.
பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் பாதுகாக்க முடியும். ஆனால் தற்போது 11 சடலங்கள் பிரேத அறையில் உள்ளன என்று தெரிவித்த பதில் பணிப்பாளர், எதிர்காலத்தில் இந்த நெருக்கடி நிலைமை அதிகரிக்கக் கூடும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மின் தகன மயானமே உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மாவட்டத்துக்கு வெளியே உள்ள மயானங்களில் உடல்களைத் தகனம் செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பருத்தித்துறை வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் கேம்பயன்மணல் மயானத்துக்குக் கொண்டுசெல்வதற்கான செலவுகளையும், உயிரிழந்தவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர் எனில் மின் தகனம் உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்போம் என்று தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஊடாக நாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் .
பொதுமக்கள் சளி, தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பயமின்றி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
வைத்திய தேவைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு வைத்தியசாலையின் பொதுத் தொலைபேசி இலக்கங்களான 0212263261 மற்றும் 0212263262 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்று பதில் பணிப்பாளர் மருத்துவர் வே.கமலநாதன் தெரிவித்தார்.
Leave a comment