நடைமுறையிலுள்ள தேர்தல் முறை மோசடியானது என்றும் அதனைத் திருத்தும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாலக புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் ஐந்து இலட்சம் பேர் வாக்களிப்பதில்லை என்றும் அவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கான நடைமுறைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு, மக்கள் எதிர்பார்க்கும் தேர்தல் முறையொன்று நாட்டுக்கு அவசியமெனத் தெரிவித்த அவர், இனம், மதம். குலம், பிரதேசம் என கட்சிகள் செயற்படுவது ஜனநாயக தேர்தல் முறைமையாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற சர்வதேச தேர்தல் தினத்தையொட்டிய நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தூதுவர்கள், கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தேர்தல் துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நாடு மக்கள் எதிர்பார்க்கும் தேர்தல் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க முடியாமலுள்ளனர். வெளிநாடுகளில் பணிபுரிவோர், டாக்டர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பணிபுரிவோர், சிறைக் கைதிகள், ஊடகவியலாளர்கள், விமான சேவை துறையில் பணி புரிபவர்கள், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.
எதிர்வரும் தேர்தலில் இவர்கள் அனைவருக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதற்கிணங்க வைத்தியசாலைக்கு அருகில் சிறைச்சாலைகளுக்கருகில் விமான நிலையத்திற்கருகில் என அவர்கள் தொழில்புரியும் இடங்களுக்கு அண்மித்த பகுதியில் அவர்களுக்காக விசேட வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் முறை மோசடியானது. அதுதொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் நிலவுகின்ற நிலையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த திருத்தத்தை தேர்தல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் மில்லியன் அல்லது பில்லியன் கணக்கில் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடுகின்றனர். எனினும் வசதி குறைந்த வேட்பாளர்கள் தமக்கான போஸ்டர்களை அச்சிடுவதற்கும் பணமில்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். அதன்படி அனைத்து வேட்பார்களுக்கும் பொதுவான ஒரு தொகை தேர்தல் பிரசாரங்களுக்காக தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதேவேளை தேர்தல் பிரசாரங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதிலும் சமமான நேரம் வழங்கப்படவேண்டும். தேர்தல் ஆணைக்குழு சட்டங்களை நடைமுறைப்படுத்தி இதனை செயற்படுத்த முடியாது. அந்தந்த கட்சிகளே அதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகமென்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது. அது செயலில் இடம்பெறவேண்டும்.
இலங்கையின் தேர்தல் முறை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அனைவருக்கும்பொதுவான ஜனநயாக ரீதியான சமத்துவமான தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment