யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நீராடச் சென்ற நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர், இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இன்று சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.
உடுத்துறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெசிந்தன் என்ற இளைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் பாரிய கடல் அலையில் சிக்கி ஜெசிந்தன் அடித்துச் செல்லப்பட்டார்.
இளைஞர் காணாமல் போனதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாகக் கடலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், இன்று (திங்கட்கிழமை) காலை அவர் காணாமல் போன பகுதிக்கு அருகிலேயே சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டமை குறித்து மருதங்கேணி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
திறமையான ஒரு விளையாட்டு வீரரின் இந்த அகால மரணம் உடுத்துறை மற்றும் தாளையடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.