மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை (02) காலை இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி ஜீவி (GV) தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வர்த்தக நிலையங்கள் நிறைந்த பகுதியில், உயரமான ஓரிடத்தில் சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அக்கரைப்பற்று, சமுர்த்தி வீதியைச் சேர்ந்த முகுந்தன் சந்தோஷ் (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் (SOCO) பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் பல வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கல்லடிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் திரண்டுள்ளதுடன் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.