நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை ஹனுமானுடன் ஒப்பிட்டு , மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், பிவிருது ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில. “ ஹனுமான் தனி ஆளாக இலங்கையை கொளுத்தி அழித்ததுபோல, பஸில் ராஜபக்சவும் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறார் ” என்பதே கம்மன்பிலவின் முறைப்பாட்டின் சுருக்கம்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிருது ஹெல உறுமய உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க , அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றதுடன், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர். அத்துடன், அரசின் செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகளையும் முன்வைத்தனர்.
சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மற்றும் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய இரு பௌத்த பீடங்களே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களாகும். இவ்விரு பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுக்கு நாட்டின் அரசியல் கட்டமைப்பிலும் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய வல்லமை உள்ளது. இதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் அரச தலைவர்கள்கூட மாகாநாயக்க தேரர்களை சந்தித்து, ஆசி மற்றும் ஆலோசனை பெறுகின்றனர்.
மாகாநாயக்க தேரர்களை பகைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் தற்துணிவுடன் முடிவெடுக்கவும் மாட்டார்கள். தேரர்கள் போர்க்கொடி தூக்கினால் அத்திட்டம் கைவிடப்படும் நிலைமையே ஆட்சிக்கட்டமைப்பில் காணப்படுகின்றது. இதனால் நாட்டை ஆள்வது சட்ட சபையா, சங்க சபையா என்ற சர்ச்சையும் அவ்வப்போது எழும். சட்டசபையே உயரியது என அரசமைப்பில் கருதப்பட்டாலும், சங்கசபையே தீர்மானிக்கும் சக்தி என்பதே கசப்பான உண்மையாகும். அதனால்தான் நிறைவேற்று அதிகாரம் இருந்தும் ஆட்சி – நிர்வாகம் தொடர்பில் மாதாந்தம் பௌத்த சபையைக்கூட்டி ஜனாதிபதி ஆலோசனை பெற்றுவருகின்றார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகாநாயக்க தேரர்களை சந்தித்து – உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி – நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டி பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ளனர் 11 கட்சிகளின் பிரதிநிதிகள்.
இதில் குறிப்பாக மல்வத்த பீடத்தின் அனுநாயக்கத் தேரர் அதி வணக்கத்துக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரை சந்தித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள், முக்கிய சில விடயங்களை சுட்டிக்காட்டினர். அதன் தொகுப்பு வருமாறு,
மல்வத்து பீடத்தின் அனுநாயக்கத் தேரர் – அரசில் இருந்து வெளியேறிவிட்டீர்கள்தானே…?
விமல் – விலக்கிவிட்டார்கள் மகாநாயக்க தேரரே, நாட்டின் நிலைமை தொடர்பில் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பஸில் ராஜபக்ச இருக்கும்வரை உள்ளக கலந்துரையாடல்மூலம் தீர்வை எதிர்பார்க்கமுடியாது. அவருக்கு தேவையானவை மட்டுமே இடம்பெறும். அமெரிக்கா மற்றும் இந்தியாவை நோக்கியே நாட்டை அழைத்துச்செல்கின்றார். எமது நாட்டின் வான்பரப்பின் ஒரு பகுதியும் வழங்கப்பட்டுவிட்டது. தீவுகள் சிலவற்றயும் விற்பனை செய்யவுள்ளனர் எனதகவல் கிடைத்துள்ளது. எனவே, நாடுமீது கடுகளவேனும் பற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கான சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய முன்வரவேண்டும்.
உதய கம்மன்பில – தற்போதைய சூழ்நிலையில் மேலும் 12 பேர் விலகினால் அரசு சாதாரண பெரும்பான்யை இழந்துவிடும். அரசின் செயற்பாடுகளால் 12 இற்கும் மேற்பட்டவர்கள் அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஊருக்குகூட செல்ல முடியவில்லை. மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.
விமல் – இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும், அவ்வாறு நடந்தால் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். அசிங்கமான அமெரிக்கர் நாட்டைவிட்டு சென்றுவிடுவார்.
உதய கம்மன்பில – அமெரிக்கர் ஒருவர் சென்று வியட்னாமை அழிப்பதுபோன்று முன்னர் திரைப்படங்களில் காண்பிக்கப்படும். ஹனுமான் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையை கொளுத்தி அழித்ததுபோல, தனி அமெரிக்கர் (நிதி அமைச்சர்) இன்று நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் வரிசைகளில் காத்திருந்து துன்பப்படுகின்றது.
விமல்வீரவன்ச – சமையல் எரிவாயு பிரச்சினையைப் பயன்படுத்தி ‘லிற்றோ’ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கின்றனர். அரசே கறுப்பு சந்தையில் டொலர் வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
உதய கம்மன்பில – அரசு பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், அதனை பயன்படுத்தி , துப்பாக்கியால் செய்ய முடியாமல் போனதை டொலர் மூலம் செய்துகொள்ளும் நோக்கிலேயே கூட்டமைப்பினர் சர்வக்கட்சி மாநாட்டுக்கு சென்றுள்ளனர். டொலருக்காகவா எம்மவர்கள் உயிர் தியாகம் செய்தனர்?
அதேபோல அமெரிக்க அதிகாரிகளின் இலங்கை வருகை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
#SriLankaNews
Leave a comment