இப் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் – என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்திருந்தாலும், தினமும் 500க்கு மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இறப்புக்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் எமது நாட்டில் மிகப்பெரும் கொவிட்-19 தொற்றுப் பரம்பல் ஏற்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி இப்பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
இல்லாவிடின் சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டதைப் போன்று மிகப்பெரும் தொற்றுப் பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.
தீபாவளி பண்டிகை பொருட்கிள்வனவுக்காக பொதுமக்கள் வர்த்தக நிலையங்களில் ஒன்று கூடும்போதும், ஆலயங்களில் வழிபாடுகளுக்காக ஒன்று கூடும்போதும் கொவிட் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்து கொள்ளல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.
பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை இயலுமான வரை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். – என்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment