எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துக! – ஜனாதிபதி பணிப்புரை

WhatsApp Image 2022 07 23 at 2.54.17 PM

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வழக்கமான மற்றும் விரைவான எரிபொருள் விநியோகம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இ.போ.ச. டிப்போக்களிலிருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முன்னைய முறைமையின்படி, மீன்பிடி, சுற்றுலா, உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்கும், பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் இ.போ.ச. ஊடாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களிலும் எரிபொருளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான சோதனைகளை விரிவுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறையை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் எரிபொருள் கொள்வனவு மற்றும் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதியமைச்சு மற்றும் அரச வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version