IMG 20230524 WA0101
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டம்-ஆளுநர் சார்ள்ஸ் பொறுப்பேற்பு!

Share

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டம்-ஆளுநர் சார்ள்ஸ் பொறுப்பேற்பு!

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டம்-ஆளுநர் சார்ள்ஸ் ஆரம்பித்தார்!

வடக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை, ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஆளுநர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்ற பின்னர் தமது முதல் பணியாக அவர் இந்த வேலைத்திட்டத்தை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

மே 22 திங்கட்கிழமை காலை 9.30க்கு உத்தியோகபூர்வமாக தமது பணிகளைப் பொறுப்பேற்ற ஆளுநர் சார்ள்ஸ், அன்றையதினம் மதியமே தெரிவுசெய்யப்பட்ட ஒருசில அதிகாரிகளுடன் நடாத்திய கலந்துரையாடலின்போது வடக்கு மாகாணத்தில் காணப்படும் சமூகச் சீர்கேடுகள் தொடர்பாக அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, இந்தப்  பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஒழுக்க விழுமியம் கொண்ட சமுதாயத்தை வடக்கு மாகாணத்தில் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலை தமது முதலாவது பணியாக மறுநாள்(மே 23 செவ்வாய்க்கிழமை) ஆளுநர் செயலகத்தில் அவர் நடாத்தினார்.

கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/ மேலதிக செயலளார்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், மருத்துவர்கள், யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ஆகியோர் சகிதம் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, யாழ் மாவட்டத்தில் 2021 முதல் இன்று வரையிலான சமூகவிரோதச் செயல்கள், வன்முறைகள், பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பாவனை, கொள்ளை, களவு, வீதி விபத்துக்கள் தொடர்பான புள்ளிவிபர ரீதியான தகவல்களுடன் சமூக மட்டத்தில் காணப்பட்டுவரும் சீர்கேடுகளை விளக்கிய யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத், இளையோர் மத்தியிலேயே இவ்வாறான பிரச்சினைகள் பரவலாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் அன்பு, பாசம் கொண்ட இறுக்கமான பிணைப்புக் காணப்படாமை இதற்கான காரணங்களில் ஒன்று என்பதை பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பாக தாம் நடாத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்திருப்பதாகவும் இதன்போது அவர் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து. இதுபற்றி கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்களிடம் ஆளுநர் விளக்கம் கேட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வினவினார்.

கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு மட்டத்தில் இதுதொடர்பாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆளுநருக்கு விளக்கியதுடன், எனினும், இந்த நடவடிக்கைகளின் போதாமையை ஏற்றுக்கொண்டனர்.

குறிப்பாக இள வயதிலேயே பிள்ளைகளின் மனோநிலை, மெல்லக் கற்கும் பிள்ளைகள், வழமைக்கு மாறான நடத்தைகள் கொண்டவர்கள் போன்றோரை முற்கூட்டியே சரியாக இனங்கண்டு, அவர்களுக்கான சிகிச்சை மற்றும் வழிகாட்டலை குழந்தைகள்நல வைததியர்கள் ஊடாக சிறுவர் உளநலப் பிரிவின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் வளர்ந்த பின்னர் அவர்கள் பிறழ்வான செயற்பாடுகளின் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தலாம் என யாழ்ப்பாண சுகாதார சேவைகள் பணிமனையைச் சேர்ந்த உளநலப் பிரிவுப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி கலைச்செல்வி சுட்டிக்காட்டினார்.

அதேபோல், பெரும்பாலான பிள்ளைகளின் நடத்தைகள், செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறை பிரதான காரணமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன், பெற்றோருக்கு பிள்ளை வளர்ப்பு தொடர்பான முறையான பயிற்சிகள், வழிகாட்டல்கள் வழங்கப்படவேண்டியது அவசியமானது என்று வலியுறுத்தினார்.

யாழ் மாவட்டச் செயலக மட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வகாணும் வகையில் விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது தகவல் வெளியிட்ட மாவட்டச் செயலாளர் சிவபாலசுந்தரம், பிள்ளைகள் பெற்றோர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும், மத அனுட்டானங்கள், அறநெறி வகுப்புக்களில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும் என ஞாயிற்றுக்கிழமைகளில் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய கீழ் வகுப்புக்களுக்கான தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை விடும் நடைமுறை ஒன்றை தாம் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இவற்றை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சார்ள்ஸ், பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் திருமணத்துக்கு முன்னரே திருமண பந்தம், குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு என்பன தொடர்பாக பயிற்சிகளும், வழிகாட்டல்களும் வழங்கும் நடைமுறை காணப்படுவதாகவும், இதுபோன்ற ஒன்று இலங்கையில் இல்லாதிருப்பது பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்று சொன்னார். எனவே, பெற்றோரை மையப்படுத்தியதாக வழிகாட்டல் செயலமர்வுகள், பயிற்சிகளை வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இதற்கென ஒரு முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்படவேண்டும் என்றும், இதில், கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு என்பவற்றுடன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும், அவற்றில் பணியாற்றும் மகளிர், சிறுவர் மற்றும் உளநல விடயங்களோடு சம்பந்தப்டப்ட அலுவலர்களும் இணைந்து செயற்படவேண்டும் என்றும் ஆளுநர் சார்ள்ஸ் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களைப் பின்பற்றி, கிராம மட்டத்திலிருந்து இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது இலகுவாக இருக்கும் என்று, இந்தக் கலந்துரையாடலின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சார்ள்ஸ், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தையும் இணைத்து இதற்கான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறும், விரைவில் அதனைத் தனது கவனத்துக்குக் கொண்டுவந்த நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரின் செயலாளர் பொ.வாகீசனுக்குப் பணிப்புரை வழங்கினார்.

#srilanakaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்ற...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை

இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 10
சினிமாசெய்திகள்

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 9
சினிமாசெய்திகள்

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க. இயக்குனர் லோகேஷ்...