அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும் கட்டமைப்புடன் இணைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
அம்பேவெல பண்ணைக்குச் சொந்தமான ‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள முறையான வளர்ச்சியைப் பாராட்டிய ஜனாதிபதி, இது ஏனைய பண்ணைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்திற்காக இப்பண்ணையை திறந்து வைப்பதுடன் அதற்குத் தேவையான பின்புலத்தை தயார்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
#SriLankaNews
Leave a comment