நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்
தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல் என நினைத்து வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் மூன்று நாள்களாகியும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் பரவலாக கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த வர்த்தகரை நலம் விசாரிப்பதற்காகச் சென்ற அவரின் உறவினர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
நாட்டில் கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், யாழிலும் தொற்றாளர்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் விழிப்புணர்வின்றி பொறுப்பற்ற நிலையில் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகலால் சுகாதாரத்துறையினர் விசனமடைந்துள்ளனர்.
Leave a comment