இலங்கை
இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையின் தேர்தல் முடிவுகள்
இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையின் தேர்தல் முடிவுகள்
இலங்கையில் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளார்.
42 சதவீத வாக்குகளை மாத்திரம் அவர் பெற்றிருந்தாலும் கூட நாடளாவிய ரீதியில் இதுவரை இருந்த ஒரு மரபினை மாற்றி தனது வெற்றியை அநுர பதிவு செய்துள்ளார்.
நாடெங்கிலும் அநுர அலை மிகத் தீவிரமாக வியாபித்திருக்கின்றது மற்றும் மக்களை மாற்றுத் தெரிவை நோக்கி சிந்திக்க வைத்திருக்கின்றது என்பது உண்மை.
இது இவ்வாறு இருக்க இலங்கையை பொறுத்தமட்டில் நாட்டின் ஒரு புதிய தலைவரை தெரிவு செய்வதில் நாட்டு மக்கள், அரசியல் செல்வாக்கு போன்றவற்றை தவிர்த்து சர்வதேசமும் கூட செல்வாக்கு செலுத்துவதாய் அமைகின்றது.
இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையின் தேர்தல் முடிவுகள் | Election Results Of Sri Lanka Shocked India
சீன சார்பு அரசாங்கம், அமெரிக்க சார்பு அரசாங்கம், இந்திய சார்பு அரசாங்கம் என்று காலத்திற்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது அவர்களுக்கு பின்னணியில் ஒரு நாடும் இருந்திருக்கின்றது.
இது சாதாரணமாகவே அனைவரும் பொது வெளியில் பேசக்கூடியதும்தான்…
இவ்வாறான நிலையியில் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட எமது அண்டை நாடான இந்தியா தனது தலையீட்டை ஆரம்பத்தில் இருந்தே உட்புகுத்தி வந்திருக்கின்றது.
குறிப்பாக, நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் வெளியானது முதற்கொண்டு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வரையான காலகட்டத்தில் வேட்டபாளர்களுடனான கலந்துரையாடல்கள், தனிப்பட்ட நகர்வுகள் போன்றவற்றை மிக நேர்த்தியாக மேற்கொள்வதில் இந்தியர்கள் கைதேர்ந்த வல்லவர்களே..
தூதர்கள் முதல், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி வருவதை நாங்கள் அறிந்து வந்திருக்கின்றோம்.
அதையும் தாண்டி ஒரு வேட்பாளரை யார் யார் ஆதரிக்க வேண்டும், யார் வெற்றிப் பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தற்போது இந்தியா செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையின் தேர்தல் முடிவுகள் | Election Results Of Sri Lanka Shocked India
குறிப்பாக இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக வெற்றிப்பெரச் செய்வதில் இந்தியா தனது அளப்பறிய பங்கை ஆற்றியுள்ளது.
குறிப்பாக, தமிழரசுக் கட்சி தங்களது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்ததில் இந்தியாவின் தலையீடு இருந்ததை அறியக்கூடியதாக இருந்தது.
யார் வந்தால் தனக்கு சாதகம் என்பதை ஆராய்ந்து, காய் நகர்த்தும் வித்தையை சரிவரக் கையாண்ட இந்தியாவால் இறுதி நேர வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
இறுதியில் சஜித் தோற்றதும், அநுரவின் ஜனாதிபதி பயணம் ஆரம்பமானதும் இந்தியாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிலும், தமிழர்களைக் கொண்டு தனது காரியம் சாதிக்க நினைத்த இந்தியாவிற்கு சஜித்தின் இந்த தோல்வி மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தனி சிங்களப் பெரும்பான்மை வாக்குகளால் கோட்டாபய ராஜபக்ச வெற்றிப் பெற்ற நிலையில், எதிர்த்துப் போட்டியிட்ட சஜித்திற்கு தமிழர் பகுதியில் செல்வாக்கு மிகுந்திருந்தது.
இந்தநிலையில், தற்போது வெற்றி பெற்றிருக்கும் அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி இப்படியொரு வெற்றியை பதிவு செய்யும் என்பதை கணித்திடாத இந்தியா சஜித்தை வெற்றிப் பெறச் செய்ய தமிழர்களைப் பகடைக்காயாய் மாற்றி பெரும் ஏமாற்றமடைந்திருக்கின்றது.
சஜித்திற்கு தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்பதை வைத்து திட்டமிட்ட இந்தியாவால், மிக அமைதியாக தனது வெற்றிக்கான அத்திவாரத்தை இட்டு வந்த அநுர தரப்பை கணிக்க முடியாமல் போனதுதான் துயரம்.
குறிப்பாக அந்நிய நாடுகளிடம் இருந்து தங்களது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இலங்கையை தமது கைவசம் வைத்திருக்க வேண்டியது இந்தியாவிற்கு இன்றியமையாததாக உள்ளது.
இதனையிட்டு இலங்கையில் தங்களுக்கு சாதகமான ஆட்சியை கொண்டு வருவதற்கே இந்தியா இத்தனை நாளும் காய்களை நகர்த்தியிருக்கின்றது.. நகர்த்தவும் போகின்றது..