tamilni 3 scaled
இலங்கைசெய்திகள்

ஈழத்தின் தியாக வரலாற்றில் இன்னுமொரு உயிர் சாந்தன்..! சிறீதரன்

Share

ஈழத்தின் தியாக வரலாற்றில் இன்னுமொரு உயிர் சாந்தன்..! சிறீதரன்

இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் “சாந்தன்” என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது.

தாயகக் கனவைச் சுமந்து, தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறைமீளப் போராடி, விடுதலையான பின்னரான இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாய்நிலம் திரும்பப் போராடி, அந்த ஏக்கம் தீராமலேயே உயிரிழந்திருக்கிற செய்தி, அத்தனை தமிழர்களையும் உறையவைத்திருக்கிறது.

இருபது வயது இளைஞனாக சிறைசென்ற தன்மகன், என்றோ ஓர் நாள் தாய்மடி சேர்வான் என்ற, சாந்தனின் தாயாரின் 33 வருடக் காத்திருப்பு பொய்த்துப்போய்விட்டது என்பதைத்தான் அத்தனை இலகுவாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தன் இளமைக்காலக் கனவுகளையும், வாழ்வையும் சிறையறைக்குள் குறுக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தின் நீட்சியில், கடந்த 2022.11.11 ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னரான இந்த ஒன்றரை ஆண்டுகளில், தாய்முகம் காணவும் தாயகம் சேரவும் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போய், உயிரற்ற உடலமாய் சாந்தன் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டமை நான் உட்பட, ஒரு இனமாக எம் ஒவ்வொருவரையும் இயலாமையின் விளிம்பில் கூனிக்குறுகி நிற்கவைத்திருக்கிறது.

இந்த இறுதிநாட்களில் எது நிகழக்கூடாது என நினைத்தோமோ அந்தக் கொடுந்துயர் நிகழ்ந்திருக்கிறது. தன் ஆயுளின் அரைவாழ்நாளை மகனுக்கான காத்திருப்பிலேயே கழித்த ஒருதாயின் கனவு கானல்நீராகக் கலைத்துப் போடப்பட்டிருக்கிறது. அந்தத்தாயின் கண்ணீரின் கனதி, இது இரங்கலோடு கடந்துசெல்லும் இறப்புச் சம்பவமல்ல என்பதை வரலாறு தோறும் எங்களுக்கு இடித்துரைத்த வண்ணமே இருக்கும்.

ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, எனது தனிப்பட்ட மற்றும் பதவிநிலை இயலுமைகளின் எல்லா எல்லைகளைக் கடந்தும் சாந்தனின் விடுதலைக்கான சில முயற்சிகளை, பல அழுத்தங்களை நானும் முன்னெடுத்திருந்தேன்.

பலதரப்பு அழுத்தங்கள், கோரிக்கைகள் எல்லாவற்றினதும் கூட்டிணைந்த வடிவமாக இருநாட்டு சட்ட நடைமுறைகளின் நெடுநாளைய இழுபறி நிலைக்குப் பின்னர், நாடு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு, பயண ஒழுங்குகளும் திட்டமிடப்பட்டு எல்லோரது வேண்டுதல்களும் கைகூடவிருந்த கடைசித் தருணத்தில் சாந்தனின் இறப்பு நேர்ந்திருக்கிறது.

எந்தச் சமரசங்களுக்கும் உட்படுத்த முடியாத வகையில், ஈழத்தமிழினத்தின் ஏதிலித்தனமும், அதிகாரமற்ற கையறுநிலையும், சாமான்யர்களின் உணர்வுகளை உணரத்தலைப்படாத அரசபீடங்களின் அசமந்தப்போக்கும், விடுதலை வேண்டிய எங்கள் இனத்தின் விடுதலைப் போராளியை காந்திய தேசத்தில் காவு வாங்கியிருக்கிறது.

இந்தக் கொடுந்துயரின் வலி சாந்தனின் குடும்பத்துக்கு வாழ்நாள் வலி என்றபோதும், இழப்பின் ரணங்களைச் சுமந்தவர்களாகவேனும் சாந்தனின் தாயார், தம்பி மதிசுதா உள்ளிட்ட சகோதரர்கள், உறவுகள் அனைவரும் இந்தக் கொடும் வலியின் வாதையிலிருந்து மெல்ல மெல்ல மீள, வல்ல இயற்கை வழிசெய்யட்டும்.

கனத்த இதயத்தோடு மாவீரன் சாந்தனுக்கு எம் புகழ் வணக்கம்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...