இலங்கை
இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்
இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அலுவலக விடுதிக்கு 5500 ரூபாய் மின்சார நிலுவையை செலுத்தவில்லை என தெரிவித்து மின்சார சபையால் வழங்கப்படும் மேலதிக பணத்திற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார நிலுவை 40 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் மாத்திரமே மின் துண்டிப்பு செய்வதாக மின்சார சபை அதிகாரிகள் நேற்று(06.02.2024) நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் விடுதிக்கு 5500 ரூபாய் கட்டவில்லை என்பதற்காக மின் இணைப்பை துண்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான இணைப்பு கட்டணத்தையும் கட்டியதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் நேற்று(06) நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மின்சார சபையின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மின்சார சபை சட்டங்கள் இருந்தாலும் ஏழை எளிய மக்களிடம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் நாற்பதாயிரத்திற்கு மேல் நிலுவை இருந்தால் மாத்திரமே மின் இணைப்பை துண்டிப்பதாக கூறுகின்றீர்கள் ஆனால் ஏழை எளிய மக்களின் வீடுகளில் ஐந்தாயிரம் ரூபாய் கட்டவில்லை என்பதற்காக மின் இணைப்பை துண்டித்து விட்டு அதனை மீள் இணைப்பு செய்வதற்காக கல்லடிக்கு வரவேண்டும் என்று கூறுவதும் மீள் இணைப்பு கட்டணமாக மூவாயிரம் ரூபாய் அறவிடுவதும் எவ்வளவு மோசமான செயல்.
அண்மையில் ஒரு ஏழைத் தாயார் மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரியிடம் ‘பரீட்சை நடக்கிறது பிள்ளை படிக்க வேண்டும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் காதில் இருக்கும் தோட்டை ஈடுவைத்துவிட்டு வருகிறேன் கொஞ்சம் பொறுங்கள்’ என்று கூறியும் வந்த அதிகாரி மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்றிருக்கிறார். எனவே கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.