இலங்கை
அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்
அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்
தொடரும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கடும் மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு (07.10.2023) தீர்மானித்துள்ளது.
அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 600 முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு போன்ற பல மாகாணங்களில் மழை பெய்துள்ளதுடன், மாத்தறை மாவட்டமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.