இலங்கை
புத்தளத்தில் மழை வெள்ளம் – 1012 பேர் பாதிப்பு!
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை வரை 274 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாரக்குடிவில்லு மற்றும் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்புக்குளி மற்றும் அங்குனவில உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், முந்தல் பிரதேசத்தில் தற்காலிக முகாம் ஒன்றும். அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதி மற்றும் மருத்துவ சேவைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
முந்தல் பிரதேச செயலகத்துடன் இணைந்து முப்படகயினரும், சுகாதார பிரிவினரும், பிரதேச சபை உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒன்றிணைந்து முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உதவிகளை செய்துவருகின்றனர்.
அத்தோடு, இன்னும் சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுருஓயாவின் 4 வான் கதவுகள் 2 அடி வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login