இந்தியா
நிபா வைரஸ் நோய் தொடர்பில் தகவல்
நிபா வைரஸ் நோய் தொடர்பில் தகவல்
இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பன்றிகளை மையமாக வைத்து நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்திற்கு சென்று, இந்நாட்டில் கால்நடை உற்பத்தி கைத்தொழில் மற்றும் பொது சுகாதாரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தபோதே வைத்தியர் ஹேமலி கொத்தலாவல இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், நிபா வைரஸ் இலங்கைக்குள் வராமல் தடுக்க நோய் கண்காணிப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது போன்று நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.