இலங்கை
கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா
கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா
சனல் 4 காணொளி வெளிவர முன்னர் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எவ்வாறாயினும் உண்மைகளை வெளிக்கொணரும் நபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிள்ளையானுடன் நெருங்கி பழகியுள்ளதுடன் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் ஆதராமாக அமைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 04 வருடங்கள் கடந்துள்ளன. இருப்பினும் இன்றளவிலும் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறினோம்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக குறித்த ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என முன்னாள் சட்டமா அதிபரும் கூறினார். மிகவும் திட்டமிட்டு, அதிகாரத்தின் மீது கொண்ட பேராசை காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட முன்னரும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல்களை பார்க்கும் போது உண்மைகளை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மூலம் இந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதில் முஸ்லிம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதே தாக்குதலின் நோக்கம் எனவும் இந்த தாக்குதலின் பின்னணியில் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சாந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளி வெளிவர முன்னர் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எவ்வாறாயினும் உண்மைகளை வெளிக்கொணரும் நபர் கோட்டாபய மற்றும் பிள்ளையானுடன் நெருங்கி பழகியுள்ளதுடன் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் ஆதராமாக அமைந்துள்ளது.
உண்மையில் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நீதியாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இன்றும் பொதுவெளியில் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள்.
பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சலே கோட்டாபய பதவி பொறுப்பேற்றவுடன் புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
நாட்டு மக்களுக்கு இந்த தாக்குதலின் பின்னணியில் சுரேஷ் சலே எந்தளவு முக்கியத்துவம் வகித்துள்ளார் என்பது தற்போது தெளிவாகிறது.
கோட்டாபயவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் சலே இன்னமும் பிரதானியாக செயற்படுகிறார். இவ்வாறு இருந்து கொண்டு உண்மைகளை வெளிக்கொணர முடியாது. உடனடியாக சுரேஷ் சலே பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
காணொளி மூலம் வெளிக்கொணரபட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். சனல் 4 ஐ விமர்சிக்காமல் பிள்ளையான், சுரேஷ் சலேயிடம் விசாரணைகளை நடத்துங்கள்.
உயிர்த்த தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதன் மூலமே நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை இல்லாமல் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.