இலங்கை
கடப்பாடுகளை உரிய காலப்பகுதியில் நிறைவேற்றுவதே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரேவழி!


பெரும்பாகப்பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள்
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் செம்டெம்பருக்குள் இணக்கப்பாடு அவசியம்
கடப்பாடுகளை நிறைவேற்றும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
வலுவான கொள்கைத்தீர்மானங்களை அடுத்து இலங்கையின் பெரும்பாகப்பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் தென்படுகின்ற போதிலும், ஒட்டுமொத்த கொள்கைசார் மற்றும் பெரும்பாகப்பொருளாதார நிலைவரம் சவால்மிக்கதாகவே காணப்படுவதாக இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடிவுக்குக்கொண்டுவந்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை உரியவாறான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதுடன் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், ஆட்சிநிர்வாகத்தை மேம்படுத்தல், வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய கடப்பாடுகளை உரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதன் மூலமே இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையால் மீளமுடியும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின்விரிவாக்கப்பட்டநிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி எட்டப்பட்டது. அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தினால் இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான முதலாவது மதிப்பீட்டுக்கு முன்னரான வழமையான ஆய்வுகளின் ஓரங்கமாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கிளை தலைவர் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இக்காலப்பகுதியில் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள், தனியார் துறையினர் மற்றும் அபிவிருத்திப்பங்காளிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய அவர்கள், நாட்டின் அண்மையகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் மதிப்பீடுகளையும் மேற்கொண்டிருந்தனர். அதன்படி நேற்றைய தினத்துடன் இலங்கைக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை முடிவுக்குக்கொண்டுவந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கைக்கான எமது விஜயத்தின்போது பெரும்பாகப்பொருளாதாரத்திலும், நிதியியல் துறையிலும் ஏற்பட்டுள்ள அண்மையகால மாறுதல்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். வலுவான கொள்கைத்தீர்மானங்களை அடுத்து இலங்கையின் பெரும்பாகப்பொருளாதார நிலைவரமானது பணவீக்க வீழ்ச்சி, நாணயமாற்றுவீத உறுதிப்பாடு, மத்திய வங்கி கையிருப்பின் மீள்வலுவாக்கம் ஆகியவற்றுடன்கூடிய முன்னேற்றகரமான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றது. எதுஎவ்வாறிருப்பினும் ஒட்டுமொத்த பெரும்பாகப்பொருளாதார மற்றும் கொள்கை நிலைவரம் சவால்மிக்கதாகவே காணப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவசதிச்செயற்திட்டத்தின் பிரகாரம் முக்கிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். அதன் செயற்திறன் குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள முதலாவது மதிப்பீட்டின்போது கணிப்பிடப்படும்.
அதேவேளை வெற்றிகரமான வருமான உட்பாய்ச்சலை உறுதிசெய்வதற்கு மிக அவசியமாக மேற்கொள்ளப்படவேண்டிய மேலதிக நிதியியல் நடவடிக்கைகள் குறித்து நாம் கலந்துரையாடினோம். அதேபோன்று தற்போது உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன்வழங்குனர்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியதுடன் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடினோம். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின்படி கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தவேண்டுமெனில், முதலாவது மதிப்பீட்டு செயன்முறைக்கு முன்னதாக (செம்டெம்பர் மாதத்துக்கு முன்னர்) கடன்மறுசீரமைப்பு தொடர்பில் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாட்டை எட்டுவது அவசியமாகும். அதுமாத்திரமன்றி உரியவாறான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், ஆட்சிநிர்வாகத்தை மேம்படுத்தல், வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய கடப்பாடுகளை உரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதும் இலங்கை இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளாகும் என்று அவ்வறிக்கையின் ஊடாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
#srilankaNews