இலங்கை
வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!


ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் தரம் எட்டு முதல் பதினொன்று வரை கல்விகற்கின்ற 125 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்விற்கான நிதி அனுசரணையை எச்.எஸ்.பி.சி வங்கி வழங்கியதுடன் நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எச்.எஸ்.பி.சி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜினர், பாடசாலை அதிபர் திருமதி ஜஸ்ரின் பிறின்ஸ்லி கிறிஸ்ரபெல், ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் யாழ் – கொழும்பு பணியாளர்கள் மற்றும் எச்.எஸ்.பி.சி வங்கி பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலை மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் கல்விப்புலத்தில் மாணவர்கள் நாள்தோறும் எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான உதவிகள் அவர்களுக்கான கல்விக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிவருகிறது என இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியிருந்த பாடசாலை அதிபர் திருமதி ஜஸ்ரின் பிறின்ஸ்லி கிறிஸ்ரபெல் கூறியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் விருந்தினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து பாடசாலை முன்றலில் “நாளைய பசுமைக்காக” எனும் தொனிப்பொருளில் கொய்யா, மாதுளை மற்றும் கொடித்தோடை போன்ற பழமரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
#srilankaNews