தென்னிந்திய இந்து அடிப்படைவாதத்திற்கு பூரண ஒத்துழைப்பு!
தென்னிந்திய இந்து அடிப்படைவாத அரசியல் செயற்பாடுகள் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கிறது. இதற்கு சுமந்திரன், சாணக்கியன், மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் வெவ்வேறு அரசியல் மோதல்கள், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், முழு நாடுமே அதனை அவதானித்துக்கொண்டிருக்கும் வேளையில் வடக்கு கிழக்கில் இலங்கை இனத்தவர்களால், தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.
தென்னிந்திய இந்து அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டிலும் தலைமைத்துவத்திலும் இலங்கையில் தமிழ் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பில் தான் இந்த தொல்பொருள் உரித்துக்கள் விரைவாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.
சாதாரண தமிழ் மக்கள் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதிலும் அவர்களின் குரல் வெளியில் வருவதில்லை.
அண்மையில் தென்னிந்திய இந்து அடிப்படிவாத அரசியல் கட்சியின் தலைவர்கள் இருவர்களான அர்ஜுன் சம்பத் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வடக்கிற்கு விஜயம் செய்தனர். அவர்கள் சுமந்திரன் , சாணக்கியன், திலீபன் ஆகியோரை சந்தித்து இந்த தொல்பொருள் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்கின்றனர்.
வடக்கு கிழக்கில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை வேலன் சுவாமிகள் மற்றும் சச்சிதானந்தன் ஆகிய இந்து அடிப்படைவாத தலைவர்கள் இருவரும் பொறுப்பேற்றுள்ளனர்.
அனுராதபுரம் உள்ளிட்ட ஆரம்பகால தொல்பொருள் பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட 74 பிரதேசங்கள் உள்ளடங்கிய அறிக்கைகள் அவர்களிடம் உள்ளது. இவற்றை மாற்றியமைக்கும் வேலைத்திட்டமே இவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
அதன் ஒரு வேலைதிட்டமாகவே, வெடுக்குநாறி மலையில் சிவன் ஆலையம் ஒன்றை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது அனுராதபுரம் காலத்து பெளத்த விகாரையாகும். எட்டு விகாரைகள் இங்கு இருந்தன. யுத்த காலத்திலும் இது பெளத்த பகுதியாகவே இருந்தது.
அண்மையில் இவர்கள் இந்த பகுதியை சிவன் ஆலயமாக மாற்றியுள்ளனர். இதனை சாதாரண தமிழ் மக்கள் செய்யவில்லை, வேலன் சுவாமிகள் மற்றும் சச்சிதானந்தன் ஆகியோரே செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் அப்பகுதியில் இருந்த சிவன் ஆலயத்தை சிங்கள மக்கள் அழித்ததாக கூறினர். ஆனால் சிங்கள மக்கள் அதனை செய்யவில்லை, இவர்களே இந்த பகுதியை நாசமாக்கி இன்று சிங்கள தமிழ் முரண்பாட்டை உருவாக்க நினைகின்றனர்.
சிவ பூமி என அடையாளப்படுத்தி இதில் ஏனைய மதத்தவர் இங்கு வருவதை தடை செய்வதாக தெரிவித்துள்ளனர். சிவனை மட்டும் வழிபடும் வேலைத்திட்டமொன்றை மட்டுமே இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். பிள்ளையார், சரஸ்வதி , முருகன் ஆகிய கடவுள்களை வழிபடுவதைக்கூட தடை செய்யும் விதமாக இவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது என்றே தமிழ் மக்கள் எமக்கு கூறுகின்றனர்.
தென்னிந்திய அரசியல் செயற்பாட்டாளர்களும் இங்குள்ள பிரிவினைவாத செயற்பாட்டாளர்களும் இணைந்து மீண்டும் நாட்டில் பிரிவினைவாத குழப்பநிலையை உருவாக்கவே முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான தொல்பொருள் ஆக்கிரமிப்புகள் வேகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் விக்ரமசிங்க அரசாங்கம் அதற்கு இடம் கொடுத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாது அதனை ஊக்குவிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது.
இலங்கையில் உள்ள தொல்பொருள் சட்டமானது மிகவும் பலமானது. எவரேனும் தொல்பொருள் பகுதிகளை சேதப்படுத்தினால் அவர்களுக்குப் பிணை வழங்க முடியாத அளவிற்கு சட்டத்தால் தண்டிக்கப்படும் குற்றமாகும். ஆனால் தொல்பொருள் திணைக்களம் இதனை கையாள முடியாத அளவிற்கு அமைச்சரவை தடுத்துள்ளது.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தென்னிந்திய இந்து அடிப்படைவாத அரசியல் செயற்பாடுகளின் கைபொம்மை போன்றே செயற்படுகின்றார். அமைச்சரும் இந்து செயற்பாட்டாளர்களின் கைபொம்மையாகிவிட்டார்.
அனுராதபுரம் யுகத்தின் பெளத்த அடையாளங்கள் இந்து மயமாக்கப்படும் வேலைத்திட்டம் வேகமாக இடம்பெற்று வருகின்றது. அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் ஆகியோர் எவ்வாறு இங்கு வந்தனர் என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
நாடு முழுவதும் காணப்படும் தொல்பொருள் சின்னங்கள் சிங்கள பெளத்த அடையாளங்கள் மட்டும் அல்ல, இலங்கைக்கான அடையாளங்களாகும், இலங்கையில் இவ்வாறான வரலாறுகள் இருந்தது என்பதற்காக அடையாளமாகும். எனவே இதனை பாதுகாக்க வேண்டும்.
சுற்றுலாத்துறையுடன் இவ்வற்றை இணைந்து நாட்டை முன்னேற்ற முடியும், எனவே ஜனாதிபதி இதனை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நாசமாக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்தி வேலன் சுவாமிகள் மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் முன்னெடுக்கும் நாசகார வேலைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கையின் அடையாளங்களை பாதுகாக்க கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
#srilankaNews
Leave a comment