அரசியல்
திருமலையில் பெளத்த சிலை – முஸ்லீம் எம்பிக்கள் கேள்விகளுக்கு மழுப்பிய விதுர!
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இடையிட்டு கேள்வியொன்றை எழுப்பினார்.
திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் பெளத்த பிக்கு ஒருவரினால் பெளத்த சிலை வைக்க முற்பட்டபோது ஏற்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. குறித்த மதகுருவுக்கு அமைச்சு பாதுகாப்பு அதிகாரி வழங்கப்பட்டிருப்பதும் அவர்கள் அங்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொது மக்களுக்கு துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தும் நிலைமை சிலைவைப்பதை தடுத்த மக்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
அதேபோன்று தொல்பொருள் நடவடிக்கையின் போது எமது பிரதேசத்தில் காலாகாலமாக வாழ்ந்துவந்தவர்களின் வீடுகள், அவர்களின் விவசாய பூமிகள் அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?
இதற்கு பெளத்த விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை இதுதொடர்பாக தேடிப்பார்த்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன்.
அத்துடன் தொல்பொருள் நடவடிக்கையின் போது ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் தகவல் வழங்கினால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறுக்கிட்டு, திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்துக்கு சில மதத்தலைவர்கள் அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சென்றிருக்கின்றனர். இதன்போது அந்த பிரதேசத்தில் எதிர்ப்பு தெரிவித்த மக்களை நோக்கி துப்பாகி நீட்டி அச்சுறுத்தி இருக்கின்றனர்.அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் எந்த அடிப்படையில் மதத்தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்த இடத்துக்கு சென்றார்கள் என்பது தொடர்பில் நீங்கள் தேடிப்பார்ப்பீர்களா? எமக்கு அறிக்கை சமர்ப்பீர்களா ? என கேட்டார்.
அதற்கு அமைச்சர் அமைச்சு பாதுகாப்பு பிரிவு பெளத்த கலாசார அமைச்சுக்கு உட்பட்டது அல்ல. அந்த கேள்வியை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வையுங்கள் என்றார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க.
You must be logged in to post a comment Login