இலங்கை
தோட்டங்களை நோக்கி படையெடுக்கும் காட்டுப்பன்றிகள்
காட்டுப்பன்றி, நரி, அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு குடிகொண்டுள்ளது.
மத்துரட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் ப்ரௌன்ஸ் பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழுள்ள, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகுடுகலை கிளன்டவன் தோட்ட தேயிலை மலைகளை காட்டு எருமை மாடுகள் ஆக்கிரமித்து மேய்ந்து வருவதால் தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாகுடுகலை கிளின்டன் தோட்டத்தின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் அருகில் உள்ள இயற்கை வனப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டுள்ள காட்டு எருமைகள் தினமும் இந்த தேயிலை தோட்டங்களை நோக்கி படையெடுத்து மேய்ந்து வருகின்றன.
இந்த நிலையில் குறித்த தேயிலை மலையில் கொழுந்து கொய்வதற்காக தின பணிக்கு அமர்த்தப்படும் தோட்ட தொழிலாளர் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் பணிக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.
அத்துடன் மழைக்காலங்களில் புகைமூட்டம் ஏற்படும் ஏற்படும் போது வனப்பகுதியில் இருந்து படையெடுத்து வரும் காட்டு எருமைகளினால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல மழைக்காலங்களில் வனப்பகுதியில் இருந்து படையெடுத்து வரும் எருமைகள் மாகுடுகலை-ஹைபொரஸ்ட் பிரதான வீதிகளுக்கும் வருவதால் வீதியில் பயணிக்கவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தேயிலை மலைகளில் வளர்ந்து உள்ள கொழுந்தை கொய்ய முடியாது தொழில் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வருமானத்திலும் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டு, காட்டு எருமைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாகுடுகலை கிளன்டவன் தோட்ட நிர்வாகம் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி தேயிலை மலைகளுக்கு படையெடுக்கும் காட்டு எருமைகளை கட்டுப்படுத்தி தொழில் நடவடிக்கையை அச்சமின்றி முன்னெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login