இலங்கை
கறுப்புச் சந்தையில் காப்புறுதி நிறுவனங்கள்
நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான வினா நேரத்தில் காமினி வலேபொட எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
காமினி வலேபொட எம்பி தமது கேள்வியின் போது, நாட்டில் பல தனியார் காப்புறுதி நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனங்கள் கறுப்புச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு பாரிய வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதற்கான வருமான வரி முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், சேவையில் ஈடுபடுத்தாமல் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கும் கூட எந்த சலுகையுமின்றி ஈவிரக்கமற்ற விதத்தில் முழுமையான தவணைக் கொடுப்பனவுகளை அறவிட்டு வந்துள்ளன.
இதனால் வாகன உரிமையாளர்கள் விவசாயிகளும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.அத்துடன் அத்தகைய நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு முறையாக வருமான வரியை செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளித்த போதே, நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும்.
அத்தகைய தனியார் காப்புறுதி நிறுவனங்கள் உரிய முறையில் வருமான வரியை செலுத்துகின்றனவா என்பது தொடர்பில் ஆராய விசேட கவனம் செலுத்தப்படுவதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அந்த விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படும் என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login