தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்கு பொறுப்பானவர்களைக் கைது செய்ய பொலிஸார் தவறியுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) திங்கட்கிழமை (30) கடிதம் குற்றம் சுமத்தியுள்ளது.
பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு அனுப்பியுள்ள குறித்த கடித்த்தில், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உடனடி பாதுகாப்பை வழங்கியதற்காக பொலிஸ் மா அதிபரை பாராட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு 12 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், பொலிஸார் இதற்கு காரணமானவர்களைக் கைது செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
அச்சுறுத்தல் விடுத்தவர் வெளிநாட்டில் வசித்தாலும் அத்தகைய குழுக்களுக்கு உள்நாட்டில் ஆதரவு உள்ளது என்பது தெளிவாகிறது என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில உறுப்பினர்களில் தனிப்பட்ட இல்லங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளின் கொடுப்பனவுகளைப் பார்த்து உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் திறமையான புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம் இருப்பதாகவும், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவது, பொலிஸார் மீதும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதில் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெடுக்கும் என்றும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment