மன்னார் ஊடாக இந்தியா செல்ல முற்பட்டோருக்கு விளக்கமறியல்!

image 59e271607c

மன்னார் – தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 12 பேர் வியாழக்கிழமை(22) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த 12 நபர்களில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

அவர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரியவருகிறது.

குறித்த 12 பேரும் வெள்ளிக்கிழமை(23) மாலை மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளடங்களாக 5 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

#SriLankaNews

Exit mobile version