இலங்கை
கியூஆர் முறைமைக்கு மட்டுமே இனி எரிபொருள்!
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை மட்டுமே செயற்படுத்தப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742123123 என்ற வட்சப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் அவர்கள் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டால், அவர்களின் கியூஆர் குறியீடு செல்லுபடி அற்றதாக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சேஸ் எண்ணின் மூலம் கியூஆர் முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்கள் வாகன ஆண்டு வருமான அனுமதிப்பத்திர இலக்கத்தைக் கொண்டு பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஓட்டோக்களும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்கு ஒதுக்கப்படும் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவைப்படும் உபகரணங்களின் உரிமையாளர்கள் தங்களது பிரதேச செயலகத்தில் எரிபொருளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதே வேளையில், பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, அவற்றின் வழித்தட அனுமதி மற்றும் பயணித்த கிலோமீற்றர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை போக்குவரத்து சேவைகள், ஊழியர் போக்குவரத்து, கைத்தொழில்கள், சுற்றுலா தொடர்பான வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட சேவைகளுக்கு தேவையான அனைத்து எரிபொருளையும் போக்குவரத்து சபை டிப்போ வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அம்பியூலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அவற்றுக்கு வரையறையற்ற எரிபொருள் வழங்கவும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
#SriLankaNews
You must be logged in to post a comment Login