அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. கடற்கரைப் பகுதியிலுள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் 75 இற்கும் மேற்பட்ட காணிகள் மற்றும் தென்னந்தோட்டங்களும் கடலரிப்பால் அழிந்துள்ளன.
இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்களால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதுடன் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பால் இப்பிரதேச கடற்கரை பிரதேசத்தில் தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் கரையோரங்களில் நிர்மாணிக்கபட்டிருந்த கட்டடங்களின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.
மேலும், கடலரிப்பால் அப்பகுதியில் போக்குவரத்துச் செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த சுனாமித் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் கடலரிப்பால் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
#SriLankaNews
Leave a comment