அரசியல்
ஜோன்ஸ்டனின் மனு இன்று ஆராய்வு


தாம் கைதுசெய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிப் பேராணையை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான ஆராய்வு இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்றுப் பிடியாணை பிறப்பித்தார்.
சந்தேகநபர் தாம் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார் என்று மேலதிக மன்றாடியார் நாயகமான அயேஷா ஜினசேன நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி சந்தேகநபர் தங்கியிருந்த வெள்ளவத்தை, வத்தளை, பத்தரமுல்லை, நுகேகொடை, உடாஹமுல்ல ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளைச் சோதனைக்குட்படுத்திய போதும் அவர் அங்கிருக்கவில்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் அயேஷா ஜினசேன நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தினார்.
இதன்காரணமாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு அவர் கோரினார்.
இதை ஆராய்ந்தபோதே கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இந்தப் பிடியாணையை பிறப்பித்தார்.
You must be logged in to post a comment Login