அடுத்த வாரத்திலிருந்து தடையில்லாத தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தடையில்லாத மின்சாரத்தை வழங்குவதற்காக அதிகளவான மசகு எண்ணெய் மற்றும் டீசல் இருப்புக்களை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சார வெட்டை நடைமுறைப்படுத்தாது தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு மாணவர்களும் ஏனைய தரப்பினரும் கேட்டுக்கொண்டமைக்கமைய தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான எரிபொருளின் தேவை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கான்கள் மற்றும் பீப்பாய்களுக்கு டீசலை வழங்குவதை விட மின்சார சபைக்கு டீசலை வழங்குவது இலகுவானது. எனவே ஜெனரேட்டர்களுக்கு டீசல் வழங்குவதை முற்றாக நிறுத்துவதற்குத் தீர்மானம் எடுக்க முடியும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நுரைச்சோலை அனல் மின் நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும். நீர் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்து நாளை திங்கட்கிழமை அல்லது மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் தடையில்லாத மின்சாரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்படும்.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை டீசல் ஏற்றி வரும் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் இந்தத் தீர்மானத்தை எட்ட முடியும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment