அரசியல்
ரணிலின் நடவடிக்கை வெட்கம் கெட்ட வேலை – சுமந்திரன் காட்டம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை விவாதத்துக்குக் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் ஆளும் கட்சியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டமை வெட்கம் கெட்ட வேலை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் சீற்றத்துடன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை நேற்றே – முற்கூட்டியே விவாதிப்பதற்கு ஏற்ற வகையில் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தக் கோரும் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுத் தரப்புடன் சேர்ந்து அதற்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்களித்திருந்தார். ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனால் ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில், நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி.,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாக்க முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை நாடு இப்போது அறிந்திருக்கும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் ஜனாதிபதி தனது பதவியை இழக்கப்போவதில்லை.
ஆனால், உங்கள் பெயர்கள், நீங்கள் இந்தப் பிரேரணை மீது வாக்களித்த முறையின் அடிப்படையில் இன்று பலகையில் காட்சிப்படுத்தப்பட்டன. ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள் என்பது இப்போது நாட்டுக்குத் தெரியும். பிரதமர் மற்றும் அரசின் கதிரைகளில் அமர்ந்திருப்பவர்களின் வெட்கக்கேடான நடத்தை இது.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை வரைவு செய்யப்பட்டபோது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்ததார்.
ரணில் இந்தப் பிரேரணையைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். நான் அதை அவருக்கு ஏப்ரல் 26ஆம் திகதி அனுப்பினேன். அவர் அதை ஆய்வு செய்தார். இந்தப் பிரேரணையை காலிமுகத்திடலுக்கு அனுப்புமாறு அவர் பரிந்துரைத்தார்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இந்த வரைவு அனுப்பப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது. ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக பிரதமர் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்ததார்.
ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமை ஏன்? பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியமை ஏன்?
அன்றைக்கும் இன்றைக்கும் ஒன்றுதான் மாறியுள்ளது. இப்போது இவருக்கு ஒரு பதவி கிடைத்துள்ளது. அன்று எதிர்க்கட்சியில் இருந்தார். இன்று பிரதமராக இருக்கின்றார்.
பிரதமர் பதவிக்காக ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டுக்குப் பகிரங்கமாகத் தாம் கூறிய கொள்கைகளை இவர் வியாபாரம் செய்துள்ளார்.
இவர் நமது நாட்டுப் பிரதமர். உட்காருகின்றாரா, நிற்கின்றாரா, நடப்பாரா என்று தெரியாத ஒருவரைப் பிரதமராகப் பெற்றிருக்கின்றமை நமக்கு வெட்கமாக இருக்கின்றது. இவருக்கே இவரது கொள்கைகள் என்னவென்று தெரியவில்லை. இவர் சொல்வது ஒன்று, செய்வது வேறு.
ஆளும் கட்சியிலேயே ஆதரவு இல்லாதபோது எதிர்க்கட்சிகளிடம் ஆதரவைக் கேட்கும் பிரதமர் இவர்தான்” – என்றார்.