அரசியல்
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: மஹிந்தவின் சகாக்கள் இருவர் கைது!


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகாக்களான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று முன்னராகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவும், மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 78 பேரை அடையாளம் காண்பதற்காகப் பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
அவர்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.