TNA
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு: இந்தியா முழுத் திருப்தி! – சம்பந்தன் குழுவிடம் ஜெய்சங்கர் விவரிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசுத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற நேரடிப் பேச்சுகள் நம்பிக்கையைக் கட்டி வளர்த்து, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதத்தில் அமைந்தமையை அறிந்துகொண்டு, அது தொடர்பில் முழுத் திருப்தியும் வரவேற்பும் வெளியிட்டிருக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்.

கொழும்பு வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று மாலை 4.30 மணி முதல் கொழும்பு இந்திய ஹவுஸில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கொழும்புக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசுக் குழுவினருடன் தாம் நடத்திய பேச்சுகள் குறித்து சம்பந்தனும் சுமந்திரனும் முதலில் விளக்கினர். அவற்றைச் செவிமடுத்த ஜெய்சங்கர், அதன்பின்னர் அந்தப் பேச்சுத் தொடர்பில் இந்தியாவின் முழுத் திருப்தியையும் வரவேற்பையும் வெளியிட்டார்.

“ஜனாதிபதி கோட்டாபயவுடனான சந்திப்பின்போதும் அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாங்கள் நடத்திய பேச்சுக்களை விவரித்தார். இப்போது நீங்கள் சொன்ன, அதே தகவல்களை அவரும் சொன்னார். என்னுடைய அனுபவத்தில் இப்படியான பேச்சுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே ஒரே விதமாகக் கருத்து வெளியிடுவது இதுவே முதல் சந்தர்ப்பம். ஆகையால் இந்தப் பேச்சுகள் இரு தரப்பு நம்பிக்கையைக் கட்டி வளர்த்து நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என நான் நம்புகிறேன்” – என்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்றிரவு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

“இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தமது இலங்கை விஜயத்தின்போது இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மார்ச் 25ஆம் திகதி இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் அதையொட்டிய பிந்திய நிகழ்வுகளை வெளிவிவகார அமைச்சருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கியது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பயன்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், புலம்பெயர்ந்தோர் முதலீடு போன்ற விடயங்கள் பேசப்பட்டன எனக் கூட்டமைப்பினர் தெரியப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதியை வெளிவிவகார அமைச்சர் சந்தித்தபோதும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான ஊடாட்டம், தொடர்பாடல்கள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டன.

இலங்கை வெளிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை இந்திய வெளிவிகார அமைச்சர் சந்தித்தபோதும் இது தொடர்பில் மேலதிக புரிதலுக்கான விடயங்களும் விவரிக்கப்பட்டிருந்தன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தன்னுடைய பங்குக்கு, அரசு – கூட்டமைப்புப் பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சாதகமான அம்சங்களை வரவேற்றுக் கருத்து வெளியிட்டார்.

ஐக்கிய இலங்கையின் கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி, சமாதானம், கெளரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்படுவதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை அவர் மீள உறுதிப்படுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியா வழங்கும் அபிவிருத்திப் பங்களிப்பும் வெளிவிவகார அமைச்சர் பங்குபற்றிய எல்லாக் கூட்டங்களிலும் மெச்சி வலியுறுத்தப்பட்டன.

இலங்கையின் பிரதமருடன் இணைந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தமையில் தமது விசேட திருப்தியை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டார்.

அவர் இலங்கையின் கடற்றொழில் மற்றும் உயிரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தனியாகச் சந்தித்து மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்” – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...