கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை மற்றும் மாண்டஸ் புயல் தாக்கம் மற்றும் கடுமையான குளிருடனான காலநிலையின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 181 குடும்பங்களை சேர்ந்த 1,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக பாதிப்படைந்துள்ளதோடு 180 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 648 மாடுகள், 166 ஆடுகள் உள்ளடங்கலாக 800 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை கடும் காற்று உள்ளிட்ட காரணங்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 181 குடும்பங்களினன் வீடுகள் சேதமடைந்துள்ளன இதில் ஒரு வீடு முற்றாக பாதிப்படைந்துள்ளதோடு 180 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக இந்த வீடுகளினுடைய கூரை பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததன் ஊடாகவும் காற்று காரணமாகவும் வீடுகளில் கூரைகள் சேதமடைந்து இருப்பதாகவும் அதிகளவானவை தற்காலிக வீடுகளே சேதம் அடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளையில் வெள்ளம் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் உறவினர்களுடைய வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவில் மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக அறியப்படுகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குளங்கள் வான் வாய்ந்து வருவதோடு உடையார்கட்டுகுளம், உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலைமையில் அதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் 1500 உரப்பைகள் வழங்கப்பட்டு நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் தலையிலான ஊழியர்கள் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து குறித்த பகுதியின் வேலைகளை சீர் செய்திருக்கிறார்கள்.
அதேவேளையிலே காற்று மற்றும் மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து வீதிகளில் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டதோடு தொலை தொடர்பு மற்றும் மின் இணைப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அவை தற்போது படிப்படியாக சீர் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கடுமையான குளிர் காரணமாக குறிப்பாக ஆடு, மாடு, கோழி போன்றன பல நூற்றுக்கணக்கில் உயிரிழந்திருப்பதால் பண்ணையாளர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளார்கள் அவர்கள் இதற்குரிய நட்ட ஈடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதேவேளை கடற்கரையோர பிரதேசங்களில் கிராங்களுக்குள் வந்த வெள்ள நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதும் தாழ்நிலங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலைமையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினமும் மழை இடையே பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment