நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தினை நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் இந்தத் தணிக்கை நடத்தப்படவுள்ளது.
இதில் நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள ‘அஸ்வெசும’ பயனாளிகளின் நிதி மோசடி குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டமை, கொரோனா அசாதாரண சூழ்நிலைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமூர்த்தியின் ஊடாக வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் உரிய பயனாளிகளுக்குச் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இந்தத் தணிக்கையின் போது ஆராயப்படவுள்ளது.
மேலும், தணிக்கைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னர், இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை தங்களிடம் வழங்குமாறு பயனாளிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.