டிட்வா (Ditwa) சூறாவளி காரணமாக நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, கலஹா பகுதியில் பாரிய நீல நிறப் பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கலஹா, கல்லந்தென்னாவ தெல்தோட்ட கீழ் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு பெரிய நீல நிறப் பாறை (கல்) வெளியே தெரிந்துள்ளது.
வெளியே விழுந்த அந்தப் பாறை ஒரு வகை விலையுயர்ந்த நீல ரத்தினக் கல்லாக (Blue Sapphire) இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்தப் பாறையைப் பார்ப்பதற்காகப் பெருமளவிலான மக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி வருகின்றனர்.
நிலைமையைக் கருத்திற்கொண்டு, குறித்த இடத்தின் பாதுகாப்பிற்காகவும், அந்தப் பாறையைப் பாதுகாக்கவும் கலஹா பொலிஸார் தற்போது விசேட பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கல் உண்மையான ரத்தினக் கல்லா அல்லது சாதாரண பாறையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினருக்கு (National Gem and Jewellery Authority) அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களின் பரிசோதனைக்குப் பின்னரே அது குறித்த உண்மைத் தன்மை தெரியவரும்.