இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 38வது நினைவு தினம் இன்று (அக் 21) அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய பணியாளர்கள் 21 பேர் உட்பட மொத்தம் 68 பேரைச் சுட்டுக் கொலை செய்ததுடன், பலரைக் காயப்படுத்தியிருந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
நினைவேந்தலின் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.